×

தொடர் மழையால் உளுந்து, தட்டான்பயறு விவசாயிகள் மகிழ்ச்சி

சாயல்குடி, டிச.16: முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி பகுதியில் விவசாயம் பிரதான முக்கிய தொழிலாக உள்ளது. நெல் முக்கிய பயிராகவும், மிளகாய் அடுத்தப்படியாக பயிரிடப்படுகிறது. சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள், வெங்காயம், உளுந்து, தட்டான்பயறு போன்ற தோட்டப் பயிர்களும் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் மழைநீர் மற்றும் நீர்நிலைகளில் பெருகி கிடந்த தண்ணீரின் துணையோடு பயிரிடப்பட்ட உளுந்து, தட்டான் பயிர்கள் நல்ல மகசூல் கிடைத்தது.

இதனால் கடலாடி வட்டாரத்தில் இதம்பாடல், கடுகுசந்தை, சத்திரம், பெரியகுளம், கூரான்கோட்டை, பூப்பாண்டியபுரம் எஸ்.தரைக்குடி, உச்சிநத்தம், கொண்டுநல்லான்பட்டி, முத்துராமலிங்கபுரம், செவல்பட்டி, முதுகுளத்தூர் வட்டாரத்தில் கீழத்தூவல், கீழகன்னிச்சேரி, கமுதி வட்டாரத்தில் பசும்பொன், மருதகநல்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்தாண்டு கூடுதலாக உளுந்து, தட்டான்பயிறு பயிரிடப்பட்டது. காலம் தாழ்ந்து பருவமழை துவங்கியதால், பயிர்கள் முளையிட தாமதமானது.

இந்நிலையில் கடந்த 20 தினங்களாக அவ்வபோது நல்ல மழை பெய்வதால், கீழத்தூவல் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி போனது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறும்போது. நெல், மிளகாய், மட்டுமே முக்கிய விவசாய பயிராக பயிரிட்டு வந்தோம். ஆனால் களை எடுத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு அதிகமாக செலவு ஆகிறது. செலவு செய்தாலும் கூட தொடர்மழை, நீர்நிலைகளில் போதிய தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இதனால் குறைந்த தண்ணீரில், குறைந்தளவு பராமரிப்புள்ள குறுகிய கால பயிரான உளுந்து, தட்டான்பயறு போன்ற பயிர்களை கடந்தாண்டு பயிரிட்டோம். தொடர் மழையால் பயிர்கள் நன்றாக வளர்ந்து, நல்ல மகசூல் கிடைத்தது.இதனால் இந்தாண்டு கூடுதலான தரிசு நிலங்களை சீரமைத்து சுமார் 70 முதல் 80 நாட்களில் வளர்ந்து மகசூல் தரக்கூடிய வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6, மதுரை 1 உள்ளிட்ட ரக உளுந்துகளை பயிரிட்டுள்ளோம். தொடர் மழையால் தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரத்தில் நல்ல மகசூல் கிடைத்து விடும் என்றார்.

Tags : lentil farmers ,
× RELATED செங்காட்டுபட்டியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்